அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை


அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை
x

கோப்புப்படம்

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

* கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்,

* முதல் தலைமுறைப் பட்டதாரிகள்

* தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.

2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்கும்.

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story