அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொருளாதாரத்தில் ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால், தொழிற் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என பாரதியார் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய தொழிற்கல்விக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது.

அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டம், அம்மா மினி கிளினிக், ஜெயலலிதான பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்வது வரிசையில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய திமுக அரசு உத்தரவிட்டிருப்பதை பார்க்கும்போது, நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துகிற அரசாக திமுக உள்ளது.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதாகவும், அதில் உள்ள மாணவர்கள் வேறு பாடப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதுதான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக சொல்லப்படுவது, மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய பழமொழிக்கு ஏற்றார் போல் அமைந்துவிடுகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு, பொருளாதாரம் பாதிப்படையும், வேலை வாய்ப்பு இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொழிற்கல்வி தொடந்து சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story