தமிழக அரசு உழக்குடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழக அரசு உழக்குடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தொன்மையான கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் உழக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. அதாவது உழவர்களின் குடியிருப்பு என்ற பெயர்தான் உழக்குடியாக தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் தற்போது வரை விவசாயம் பிரதான தொழிலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழவர்கள் வசித்து வந்ததற்கான ஆதாரங்கள் தற்போதும் கிடைக்கின்றன.

நினைவுச் சின்னங்கள்

கல் வட்டங்கள், இரும்பு உருக்கும் பட்டறைகள் உள்பட ஏராளமான தொன்மை வாய்ந்த பொருள்கள் இருப்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தங்களது கட்டுரைகளில் வெளியிட்டுள்ளனர்.

உழக்குடி கிராமத்தில், கி.மு. 1000 முதல் கி.மு 300 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசர்கள் மற்றும் தலைவர்களை அடக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் அங்கு உள்ளன.

சங்க இலக்கியம்

இந்த பகுதி பற்றி சங்க இலக்கிய நூலான அகநானூற்று பாடல்களும் கூறுகின்றன. எனவே இங்கு தொல்லியல் ஆராய்ச்சியை நடத்தினால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் பல்வேறு தகவல்கள் கிடைக்க பெறும். இதுகுறித்து தொல்லியல் துறையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே உழக்குடியில் தொல்லியல் ஆராய்ச்சி நடத்தவும், இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் ஏற்கனவே ஆராய்ச்சி செய்ததில், அந்த பகுதி முழுவதும் கடுமையாக சேதம் அடைந்து கிடைக்கிறது. எனவே அங்கு அகழாய்வு நடத்துவதால் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார்.

அகழாய்வு நடத்த உத்தரவு

ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், உழக்குடி பகுதியில் முதல் கட்ட ஆராய்ச்சியில் பழமையான தொன்மையான பல்வேறு தடயங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

விசாரணை முடிவில், மாநில அரசு உழக்குடி பகுதியில் தொல்லியல் அகழாய்வை மேற்கொள்ளவும், இந்தப் பகுதியை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story