சாலை வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்


சாலை வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:49 PM IST (Updated: 20 Jun 2023 1:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

'விடியல் தருவோம்' என்று கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்து உள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி, ஏற்கெனவே தமிழக மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயில், எண்ணெய் வார்த்ததைப் போல் உள்ளது.

ஏற்கனவே வாகனங்கள் வாங்கும்போது ஆயுட்கால வரி செலுத்தியுள்ள சூழ்நிலையில், ஏன் நாங்கள் டோல்கேட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த டோல்கேட் வரியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படும் நிலையில், இந்த தி.மு.க. அரசு மீண்டும் வாகனங்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பஸ்களில் மறைமுகக் கட்டண உயர்வு என்று அரசுக்கு வரும் வரி வருவாய்களை உயர்த்தி, வாக்களித்த தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது 5 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினமும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு வசதியாக, சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்; குடும்பத்துடன் செல்வதற்கு வசதியாக சிறிய ரக நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுக்கு தடை போடும் விதமாக, சாலை வரியை உயர்த்தி வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகை செய்துள்ளது.

தி.மு.க. அரசு ஏற்கனவே தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்து 26 மாதங்கள் ஆனபின்னும் இதுவரை பெட்ரோல் விலையை தேர்தல் நேரத்தில் அறிவித்த படி குறைக்காத நிலையில், சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவினை கலைக்கும் விதமாக, சாலை வரியை உயர்த்த முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் 5 சதவீதம் சாலை வரியை உயர்த்துவதற்கு முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசு, மக்கள் நலன் கருதி இதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story