தமிழக கவர்னர் அரசுக்கு புறம்பாக செயல்படுகிறார்-கி.வீரமணி குற்றச்சாட்டு
தமிழக கவர்னர் அரசுக்கு புறம்பாக செயல்படுவதாக கி.வீரமணி குற்றம் சாட்டினார்.
பெரம்பலூரில், மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், சமூக நீதி குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டுமே போதுமான விளக்கம் கொடுத்தார். தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் அரசுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். அரசு ரகசியங்களை வெளியிடும் கவர்னர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும், என்றார். கூட்டத்தில் பிரபாகரன் எம்.எல்.ஏ., திராவிடர் கழகத்தினர், தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.