ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
சென்னை,
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதே நேரம் தமிழக அரசு தரப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தற்கொலைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே சட்டம் இயற்றப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில், வாதங்கள் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில் இன்று இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.