இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால்
புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
சென்னை
புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு மாநில முதல்-அமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.
புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.
திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்.
டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே என கூறினார்.