வளர்ச்சி திட்ட பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
செஞ்சி,
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மின்கலன் வண்டி மற்றும் பணி உயர்வு ஆணை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 10 ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மின்கலன் வண்டிகள், சோகுப்பம் ஊராட்சிக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் டிராக்டர், சத்துணவு சமையல் உதவியாளராக பணிபுரிந்த 13 பேருக்கு சத்துணவு பொறுப்பாளராக பதவி உயர்வு ஆணையையும் வழங்கி பேசினார்.
முதல்-அமைச்சர் ஆய்வு
அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வளர்ச்சி திட்ட பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. 2 ஆண்டுகளில் போடப்பட்ட திட்டங்கள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளதா என முதல்-அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திலும் 26 மற்றும் 27-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். எனவே கிராமத்திலே பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஏதேனும் நடைபெறாமல் இருந்தால் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உடனடியாக அதை முடிக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், விஜயராகவன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.