"கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது"; பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
சென்னை பல்கலைக்கழகம் நாட்டிற்கு பல தலைவர்களை தந்துள்ளதாக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
சென்னை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளியை சந்தித்தார். பின்னர், நேற்று மாலை நீலகிரியிலிருந்து சென்னை வந்த திரவுபதி முர்முக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு,
தமிழகம் வளமான கலாசாரம் மற்றும் நாகரீகத்தை கொண்டது. சென்னை பல்கலைக்கழகம் நாட்டிற்கு பல தலைவர்களை தந்துள்ளது. இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் என் வாழ்த்துகள்.
சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது.
பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலைக்கழகம். டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பலர் இங்கு படித்த மாணவர்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் பெண்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். சரோஜினி நாயுடு உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. கலாசார ஆராய்ச்சியை சென்னை பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழி நடத்துகிறது. சுப்பிரமணிய பாரதி சொன்னது போல் மந்திரம் கற்போம், என்றார்.