பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பள்ளிகளில்  காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sept 2022 7:57 AM IST (Updated: 15 Sept 2022 8:20 AM IST)
t-max-icont-min-icon

1-5 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய முதல் அமைச்சர், பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

சிற்றுண்டி திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிற்றுண்டி வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது இயன்ற அளவு அந்தந்த பகுதியில் விளையும் அல்லது கிடைக்கும் சிறுதானியங்களின் அடிபடையிலான சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் படிக்கும் 5,941 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். திருச்சி மாநகராட்சி (40 பள்ளிகள்), காஞ்சீபுரம் (20), கடலூர் (15), தஞ்சை மற்றும் கும்பகோணம் (21), வேலூர் (48), திருவள்ளூர் (6), தூத்துக்குடி (8), மதுரை (26), சேலம் (54), திண்டுக்கல் (14), நெல்லை (22), ஈரோடு (26), கன்னியாகுமரி (19) கோவை மாநகராட்சி (62 பள்ளிகள் என மொத்தம் 381 பள்ளிகளில் படிக்கும் 37 ஆயிரத்து 750 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

நகராட்சிகள்

விழுப்புரம், திண்டிவனம், புதுக்கோட்டை, பெரம்பலூர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருவத்திபுரம் (செய்யாறு), ஜெயங்கொண்டம், ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, நாகை, பரமக்குடி, காரைக்குடி, கோவில்பட்டி, மன்னார்குடி, மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் படிக்கும் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.

வட்டார பள்ளிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கரூர் கிருஷ்ணராயபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம், திருப்பூர் குண்டடம், சிவகங்கை எஸ்.புதூர், தேனி மயிலாடும்பாறை, விருதுநகர் காரியாபட்டி, திருச்சி துறையூர், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய வட்டாரத்தில் (கிராம ஊராட்சி) உள்ள 728 பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆயிரத்து 826 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

மலைப்பகுதி பள்ளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, நாமக்கல் கொல்லிமலை, திருவண்ணாமலை ஜவ்வாதுமலை, திண்டுக்கல் கொடைக்கானல், ஈரோடு தாளவாடி, நீலகிரி கூடலூர் ஆகிய மலைப்பகுதி வட்டாரங்களில் உள்ள 237 பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகள் பயனடைவர். இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது; பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பது; வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை ஆகும்.

அளவு என்ன?

ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது அதே அளவு ரவை அல்லது கோதுமை ரவை அல்லது சேமியா; அந்தந்த ஊர்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம்; உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் (சமைத்தபின் 150-200 கிராம் உணவு மற்றும் 60 மில்லிகிராம் காய்கறியுடன் சாம்பார்).

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகளின் தரத்தை உறுதி செய்து கழுவி பயன்படுத்த வேண்டும். உணவை வழங்கும் முன்பு அதன் தரத்தை ஒவ்வொரு நாளும் பள்ளி மேலாண்மைக்குழு உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.காலை உணவு திட்டத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனி வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story