தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலைமறியல் போராட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலைமறியல் போராட்டம்
x

கொடி கம்பங்களை போலீசார் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சூரமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:-

கொடி கம்பங்களை போலீசார் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சூரமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) சேலத்துக்கு வருகிறார். அப்போது அவர் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் வேல்முருகன் பங்கேற்க உள்ளார்.

இதற்காக சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ், கந்தம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிக்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு இருந்தது. இந்த 2 இடங்களிலும் இருந்த கொடி கம்பங்களை போலீசார் அகற்றியதாக தெரிகிறது.

சாலைமறியல்

இதனை அறிந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் சேலம்- ஜங்சன் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

42 பேர் கைது

அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 42 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story