"இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4வது இடம்" - அமைச்சர் மூர்த்தி தகவல்


இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4வது இடம் - அமைச்சர் மூர்த்தி தகவல்
x

இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூபாய் 66,161 கோடி ஆகும்.

இது கடந்த வருடத்தில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூபாய் 47,873 கோடியை விட ரூபாய் 18,288 கோடி அதிகமாகும். வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எய்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1610 கோடியைத் தாண்டியுள்ளது.

1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 8,696 கோடி ஆகும். கடந்த வருடத்தில் அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூபாய் 2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வகையில் வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூபாய் 20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4-வது இடம் கிடைத்துள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story