வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் தமிழகம் 4-வது இடம் - முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்


வருமான வரி செலுத்துவோர் பட்டியலில்  தமிழகம் 4-வது இடம்  - முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
x

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

மதுரை


நாட்டில் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

ரூ.2 ஆயிரம் கோடி

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் மதுரை கோட்ட அலுவலகத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பின்னர், டி.டி.எஸ். குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அரசு மற்றும் தனியார் துறைகளில் டி.டி.எஸ். தொழில்நுட்ப பிரச்சினை, விழிப்புணர்வு குறித்து பேசினார். அதனை தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை கோட்ட வருமான வரி அலுவலகம் 19 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால், தொழிற்நிறுவனங்கள் அனைத்தும் முக்கிய நகரங்களில் இருப்பதால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மதுரை கோட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி வருமான வரியில் ரூ.2 ஆயிரம் கோடி வரி பெறப்பட்டுள்ளது. அடுத்த காலாண்டுக்குள் மீதமுள்ள வரி வசூலிக்கப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி வருமானவரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 70 சதவீத வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 28 சதவீதம் கூடுதலாகும். அகில இந்திய அளவில் ரூ.14 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகத்துக்கு 17 சதவீதம் இலக்கு வழங்கப்பட்டது.

11 சதவீதம் கூடுதலாக

ஆனால், கூடுதலாக 11 சதவீதம் வரி வசூல் செய்து அகில இந்திய அளவில் 4-வது இடத்தில் தமிழக மண்டலம் சாதனை படைத்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ரூ.1,08,000 கோடியும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு அடுத்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது 67 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருகின்றனர். மதுரை கோட்டத்தில் மட்டும் 9 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துகின்றனர்.

4 மணி நேரத்துக்குள்...

பணத்தை திரும்ப பெறும் வசதி இப்போது 3 முதல் 4 மணி நேரத்துக்குள் நடந்து விடுகிறது. கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் 170 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் குறைகள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வோரை அடையாளம் காண 360 டிகிரி தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில், அவர்களின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் வரிபாக்கி வைத்திருந்த 3 ஆயிரம் பேரில் 30 சதவீதம் பேரிடம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் சுமார் 600 பேர் சமாதான் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மதுரை கோட்ட தலைமை கமிஷனர் சீமாராஜ், முதன்மை கமிஷனர் ஆஞ்சநேயலு, சென்னை தலைமை அலுவலக கமிஷனர் ராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வருமான வரி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.


Next Story