தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி
x

தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும் என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

'தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும்' என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

நலம் விசாரித்தார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திராசெல்வி ஆகியோர் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று மாலையில் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவர்களின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களுக்கு பாதுகாப்பு

மாணவர்கள் நலமுடன் உள்ளனர். மாணவர் சின்னத்துரை இன்னும் சில நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மாணவருக்கு 21 இடங்களில் வெட்டு காயம் உள்ளது. ஒரு அரிவாளை கொண்டு 3 பேர் வெட்டியுள்ளனர். மாணவன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் பள்ளிகளில் மதவாத உணர்வுகளை புகுத்துகின்றனர்.

அரசின் சார்பில் மாணவனின் தாயாருக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வி பயில உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் மாற்று பள்ளியில் படிக்க அரசு உதவிட வேண்டும்.

தனி உளவு பிரிவு

தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்க காவல்துறையில் உளவு பிரிவு உள்ளது. அதேபோல் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். இங்கு ஆணவ கொலை அதிகம் நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் சாதிய பெயரால் வன்முறைகள் நிகழ்கிறது. அதேபோல் கந்துவட்டி கும்பலை அரசு தடுக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி மாலையில் நெல்லை மேலப்பாளையத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story