தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரெயில் வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில், ரூ.1,260 கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சில முக்கிய திட்டங்களை தொடங்கிவைக்க வருகை தந்திருக்கிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி.

பல்வேறு இனங்களைச் சார்ந்த பல மொழிகளைப் பேசும் மக்கள் பரந்து வாழும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்களை கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் மத்திய அரசானது, மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை தொடர்ந்து தொய்வில்லாமல் நிறைவேற்றித் தரும்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வகுக்கப்பட்ட கூட்டாட்சிக் கருத்தியலும் செழிக்கும்.

திராவிட மாடல் அரசு

அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது. நெருக்கடியான நிதிநிலைச் சூழல் இருக்கும்போதிலும், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு மூலதனச் செலவாக இருந்த ரூ.33 ஆயிரத்து 68 கோடியை இந்த ஆண்டு ரூ.44 ஆயிரத்து 365 கோடியாக உயர்த்தியுள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள ரூ.2 ஆயிரத்து 423 கோடி மதிப்பிலான 2 சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.1,277 கோடி மதிப்பீட்டிலான 2 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

விரைவுபடுத்த வேண்டும்

நமது மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிறந்த சாலைக் கட்டமைப்பை பெற்று, சாலைகள் அடர்த்திக் குறியீட்டில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு பெரும் மூலதனச் செலவினங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை-மதுரவாயல் உயர்மட்டச் சாலை, சென்னை-தாம்பரம் உயர்மட்டச் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலை ஆக்குதல், சென்னை-காஞ்சீபுரம்-வேலூர் நெடுஞ்சாலையையும், சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையையும் 6 வழித்தடமாக மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்

பிரதமர் தொடங்கி வைத்துள்ள 'வந்தே பாரத்' ரெயில் சேவை தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கு பேருதவியாக விளங்கும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கும் இந்த 'வந்தே பாரத்' ரெயில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். அதோடு 'வந்தே பாரத்' ரெயில் சேவைக்கான டிக்கெட் கட்டணத்தை அனைவரும் பயணம் செய்வதற்கு ஏதுவாக குறைக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லை

அதே நேரத்தில், நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் குறித்த ஒரு முக்கிய கருத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு, பல ஆண்டுகளாகவே ரெயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்து.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், ரெயில்வே வரவு-செலவு திட்டத்தில் போதிய அளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக இன்னும் நிறைவடையாத நிலையில் இருக்கின்றன.

மெட்ரோ ரெயில்

எனவே, தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில்வே திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் உயர்த்தித் தரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து, பிரதமரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். சென்னையில் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்கை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசில் நிலுவையிலே உள்ளது. அதை மேலும் காலதாமதமின்றி நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விரைந்து ஒப்புதல்

அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கோவையிலும், ரூ.8500 கோடி செலவில் மதுரையிலும் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான கருத்துருக்களும் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. இவற்றுக்கும் மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் 'திராவிட மாடல்' அரசானது, எத்தனையோ சமூகவளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூகவளர்ச்சித் திட்டங்களோடு உட்கட்டமைப்புகளையும் சீர்செய்து வருகிறது. அனைத்து துறை வளர்ச்சியின் நோக்கம் கொண்ட அரசாக இருப்பதால், அனைத்து துறைக்கும் சமமான அளவில் நிதிகளை ஒதுக்கி திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதற்கு துணைபுரிவதாக மத்திய அரசின் திட்டங்கள் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை

ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலங்கள் சுயாட்சித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய அண்ணாவும், கருணாநிதியும் வலியுறுத்தி வந்தார்கள்.

மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்றவேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் இருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதித் தேவைகளையும் மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசினுடைய ஒத்துழைப்பு மிகமிகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவரும் உணர்வார் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story