தமிழ் புத்தாண்டு: கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டு வழிபாடு
சித்திரை மாதம் 1-ந்தேதியான நேற்று தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதனையொட்டி கரூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை முதலே பயபக்தியுடன் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கொடிமரத்தின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பக்தர்கள் பார்த்து ரசித்தனர். இதேபோல் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் முன்பு சூடம், விளக்கேற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
கற்பக விநாயகர்-அய்யப்பன்
இதேபோல கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1,100 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் காய்கனி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் விநாயகரை பயபக்தியுடன் தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பசுபதீஸ்வரா அய்யப்பன் கோவிலில் அய்யப்பனுக்கு காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வெண்ணைமலை முருகன் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை
குளித்தலையில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பார்வதி-தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பழம் கொடுப்பது போலவும், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் குளித்தலை கடம்பவனீஸ்வரர், நீலமேகப்பெருமாள், அய்யர்மலை ெரத்தினகிரீஸ்வரர் கோவில்களுக்கும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மேலும் பொதுமக்கள் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தங்கள் வீட்டு முன்பு வண்ணக்கோலம் போட்டிருந்தனர்.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், பழம், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணெய்மலை முருகன் கோவில் உள்பட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






