தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் சிறப்புரையாற்றினார். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்ட வேலையில் உள்ள குளறுபடியை அகற்றக்கோரியும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேலை அட்டை வழங்கக்கோரியும், வீட்டுமனை, தொகுப்பு வீடுகள், உழவர் பாதுகாப்பு அட்டை, பழங்குடி சான்று, முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மண்டல பொறுப்பாளர்கள் இன்பஒளி, ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஏசுமணி, ஆறுமுகம், அய்யனாரப்பன், தனஞ்செழியன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.