பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேத மந்திரங்கள்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆகம விதிமுறையின்படியும், கோர்ட்டு உத்தரவின்படியும் தமிழ் வேத மந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மதுரை,
கரூர் மாவட்டம் தாந்தோனியை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்க்கடவுன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடக்க உள்ளது.
சமஸ்கிருதம்
இந்த கும்பாபிஷேக விழாவை, தமிழில் வேத மந்திரம் ஓதி நடத்துவதுதான் முறை. தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என்றும், இதே நடைமுறை மற்ற கோவில்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவானது பழனி முருகன் கோவிலுக்கும் பொருந்தும். ஆனால் பல்வேறு கோவில் கும்பாபிஷேக விழாக்களில் வேத மந்திரங்கள் சமஸ்கிருதத்தில்தான் ஓதப்படுகின்றன. இது ஏற்புடையதல்ல.
எனவே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாகசாலை, கருவறை, கோபுரம் விமானம் ஆகியவற்றில் நடக்கும் பூஜைகளில் தமிழ் வேத மந்திரங்களை பயன்படுத்தி கும்பாபிஷேகத்தை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தமிழ் வேத மந்திரங்கள்
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் வீரா கதிரவன் ஆஜராகி, முருகப்பெருமான், தமிழ் கடவுள் ஆவார். எனவே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் வேத மந்திரத்தை தமிழில்தான் பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு தனி நபர்கள் அறிவுரை கூற வேண்டியது இல்லை. பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருப்புகழ், திருமறைகள் உள்ளிட்ட தமிழ் வேத மந்திரங்கள், பாடல்கள் பாடுவதற்கு ஓதுவார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். கோவில் ஆகம விதிமுறைகளின்படியும், ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படியும் கும்பாபிஷேக விழா நடத்தப்படும், என்றார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிய முறையில் கும்பாபிஷேக விழாவை நடத்தி அது தொடர்பான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.






