அதிகமான மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு
தமிழ்நாட்டில்தான் அதிக மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கிறார்கள் என்று தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறினார்.
கருத்தரங்கம்
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மற்றும் திருப்பூர் ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் 33 சதவீத பசுமை பரப்பு அதிகரித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஏ.வி.பி. கல்லூரி முதல்வர் லீலாவதி வரவேற்றார். தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் நாராயணமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் அயலக தமிழர் நலவாரிய தலைவரும், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளருமான கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி கற்க செல்கின்றனர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் எட்டிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆண்களும், பெண்களும் அதிக அளவில் உயர்கல்வி படிக்க செல்லும் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டில் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இதற்கு முழு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். ராஜாஜி மூடிய கல்விக்கூடங்களை காமராஜர் திறந்தார்.
விழிப்புணர்வு
உலகத்திலேயே அதிக மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. தமிழக முதல்-அமைச்சரின் 33 சதவீத பசுமை பரப்பு அதிகரித்தல் திட்டத்தின்படி ஏராளமான மரங்களை நடுவதுடன், காடுகளை உருவாக்க வேண்டும். தினமும் ஒருவருக்காவது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதிகமான மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு
முடிவில் மாணவி அதுல்யா நன்றி கூறினார். இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர்கள் கொ.ராமதாஸ், கவுன்சிலர்கள் அனுஷ்யா சண்முகம், பத்மாவதி, தி.மு.க. பொறுப்பாளர்கள் கேபிள் விஜய், வி.வி.ஜி.காந்தி, வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பாலு, வடக்கு மாநகர மருத்துவரணி அமைப்பாளர் ஆனந்தன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஏ.வி.பி. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.