நிலக்கரி சுரங்க திட்டத்தை டெல்டா பகுதியில் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.. அனுமதிக்காது..! - அமைச்சர் தங்கம் தென்னரசு
நிலக்கரி சுரங்க திட்டத்தை டெல்டா பகுதியில் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.. அனுமதிக்காது.. என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது:-
நிலக்கரி சுரங்க திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். நிலக்கரி சுரங்கம் போன்ற திட்டங்களை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் டெல்டா பகுதியில் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, அனுமதிக்காது
வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். ஏல அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். எதிர்காலத்தில மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை அறிவிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.