தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள செண்பகனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இளங்கலை கணிதம் பயில முறையான துறை முன் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இந்த அனுமதி தொடர்பாக பணிப்பதிவேட்டில் அவ்விவரங்கள் பதியப்பட்டு அன்றைய அலுவலவரின் கையொப்பம் இல்லை. இதுதொடர்பாக அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அன்று மாவட்டக்கல்வி அலுவலரைத் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இதேபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுதொடர்பாக அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் கூறுகையில், கடந்த 2013-ம் ஆண்டு முன் அனுமதி பெற்று கல்வி பயின்றதாகவும், அது பணி பதிவேட்டில் பதிவாகவில்லை என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு அதிகாரியின் கையொப்பம் இல்லாமல் உள்ளது. இதுதொடர்பாக அப்போது முன் அனுமதி பெற்று பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த சான்றுகள் ஏதேனும் வழங்கினால் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விண்ணப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.