தஞ்சை மாநகராட்சி கூட்டம்


தஞ்சை மாநகராட்சி கூட்டம்
x

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்கியவுடன் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் காமராஜர் மார்க்கெட்டில் பழைய கடைகாரர்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தீர்மானத்தை ஒத்தி வைக்க கோரிக்கை

பின்னர் கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மண்டலக்குழு தலைவர் புண்ணியமூர்த்தி (தி.மு.க): காமராஜர் மார்க்கெட் கடைகள் ஏலம் தொடர்பான தீர்மானம் எண் 64-ஐ ஒத்தி வைக்க வேண்டும். இந்த மார்க்கெட்டில் பழைய கடைக்காரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

மேயர் சண்.ராமநாதன்: இந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படாது. ஆணையரிடம் கலந்து பேசி பழைய கடைக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மண்டலக்குழு தலைவர் சந்திரசேகர மேத்தா (தி.மு.க) : காமராஜர் மார்க்கெட்டில் காலை நேரத்தில் சில மணிநேரம் மட்டுமே வியாபாரம் நடைபெறும். இந்த மார்க்கெட்டில் நலிவடைந்த வியாபாரிகளே வியாபாரம் செய்வதால், அவர்களுக்கு கருணை அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து மீண்டும் கடைகளை வழங்க வேண்டும்.

ஏற்க முடியாது

எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க) : காமராஜர் மார்க்கெட் கடைகள் ஏலம் தொடர்பான தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்பதே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்பட அனைத்து உறுப்பினர்களின் ஒத்த கருத்தாக இருக்கிறது. சுமூகமாக பேசப்படும் எனக் கூறினாலும், அதை முன்பே பேசி முடிவு செய்திருக்க வேண்டும். இப்போது வாய்மொழியாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

மேயர்: மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மாதம் ரூ.4 கோடி தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு காமராஜர் மார்க்கெட் கடைகள் ஏலம் விடப்படுகிறது. என்றாலும், பழைய கடைக்காரர்களுக்கு கடைகள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். ஆனால், தீர்மானத்தை ஒத்தி வைக்க முடியாது.

ஆதாரம்

ஆணையர்: ஏற்கெனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கும், உரிமதாரர்களுக்கும் இடையே போட்டி இருக்கிறது. கடை உரிமதாரர் இருந்தாலும், நான்தான் தொழில் செய்தேன் என்பதால், எனக்குதான் கடை வழங்க வேண்டும் என பலர் என்னிடம் ஆதாரத்துடன் வருகின்றனர்.

கோபால் (அ.தி.மு.க) : 4 ராஜ வீதிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கிடக்கின்றன. சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. உடனே வடிகாலை கட்டி, கழிவுநீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story