டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:46 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கள்ளக்குறிச்சி


விழுப்புரம்

ஒரே மாதிரியான ஊதியம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சிறப்பு தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் புருஷோத்தமன், குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாநிலம் முழுவதும் கடந்த 2000-வது ஆண்டுக்கு முன்பு சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், அதன் பிறகு பணியில் சேர்ந்தவருக்கும் 7-வது ஊதியக்குழுப்படி ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கடந்த 2013-ம் ஆண்டுக்கு முன்பிருந்து வேலை செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டேங்க் ஆபரேட்டர் சங்க மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட தலைவர் கோவிந்தன், செயலாளர் ஏழுமலை உள்பட ஊராட்சி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில்...

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்டவர்கள் குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் மாநில துணை தலைவர் வீராசாமி, மாவட்ட சிறப்பு தலைவர் தங்கராசு உள்பட ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story