1,250 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 1,250 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை உள்ள காரிப் பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட உள்ளது.
இதில் உளுந்து ஒரு கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1,250 டன் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.