சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி சேலம், மேட்டூரில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசையையொட்டி சேலம், மேட்டூரில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் வழங்கியதற்கு சமம் என்பது ஐதீகம் ஆகும்.
அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சேலம் மூக்கனேரியில் ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். தேங்காய், பழம், வெற்றிலை, கத்தரிக்காய் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகளை இலையில் வைத்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதே போன்று சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மேட்டூர்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலைகளில், இந்துக்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் நேற்று மேட்டூர் காவிரி பாலம் படித்துறையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
அரிசி மாவில் பிண்டம் செய்து திதி கொடுத்தனர். பிறகு அரிசி மாவில் தயார் செய்த பிண்டத்தை காவிரி ஆற்றில் கரைத்தனர்.
இதேபோல் பூலாம்பட்டி காவிரி ஆற்றின் படித்துறை, கூடக்கல் படகு துறை, குப்பனூர் மற்றும் காவிரி கதவணை பகுதிகளில் மகாளய அமாவாசையை யொட்டி நேற்று திரளானவர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து அங்குள்ள கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் கோவில் மற்றும் நந்திகேஸ்வரர் சன்னதி, படித்துறை பிள்ளையார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தனர்.
உழவர் சந்தைகள்
மகாளய அமாவாசையையொட்டி காய்கறிகள் வாங்க நேற்று பொதுமக்கள் உழவர் சந்தைகளில் கூடினர். சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூடியதால் உழவர் சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.22 முதல் ரூ.28 வரையிலும், சின்னவெங்காயம் ரூ.30 முதல் ரூ.38 வரையிலும் விற்பனை ஆனது. இதேபோல் அனைத்து காய்கறிகளும் வழக்கத்தை விட சற்று கூடுதலான விலைக்கு விற்கப்பட்டன.
அதே போன்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.320 வரை விற்பனை ஆனது. நேற்று பூக்களின் விலையும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.