பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவெண்காடு:
ஆடி அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்ப்பணம்
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு வருகிறார்கள்.
ஆடி அமாவாசை
நேற்று ஆடி அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறையில் குவிந்தனர். அவர்கள் ஆறு, கடலோடு கலக்கும் பகுதியில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சுமங்கலி பெண்கள் வாழைப்பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை காவிரியில் விட்டு நேர்த்திக் கடன் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
காவிரி துலாக்கட்டம்
இதேபோல் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் கடந்த ஜூலை 17-ந்தேதியும், நேற்றும் என 2 அமாவாசைகள் வந்தன. ஆடி மாதத்தில் வந்த முதல் அமாவாசையன்றும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் ஏராளமான பொதுமக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி 2-வது அமாவாசையான நேற்று முதல் அமாவாசையைவிட கூடுதலாக ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
நேற்று காலை முதல் காவிரியில் பொதுமக்கள் நீராடினர். பின்னர் தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்தனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். தர்ப்பணத்தில் பசும்பால், தேன், நெய், எள் மற்றும் காய்கறிகள் வைத்து வழிபாடு நடத்தினர். இதன் காரணமாக காவிரியின் வடக்கு மற்றும் தென்கரையில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.