தென்கரைக்கோட்டையில்டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்கடைக்கு ஆதரவாக மதுப்பிரியர்களும் திரண்டதால் பரபரப்பு


தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தென்கரைக்கோட்டையில் டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடைக்கு ஆதரவாக மதுப்பிரியர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடை

கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரைக்கோட்டையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் சார்பில் தென்கரைக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அயூப் கான், கடத்தூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் லியாகத், யூனிஸ்கான், சாதிக், ரபி வடகரை ஊர் முக்கிய பிரமுகர்கள் கோபி, ராஜேந்திரன், சக்திவேல், காந்தி நகர் முருகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தென்கரைக்கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்ககூடாது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வணிகர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தென்கரைக்கோட்டையில் டாஸ்மாக் கடையை திறக்ககூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே அப்பகுதியில் மதுக்கடை வேண்டும் என மதுப்பிரியர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மதுக்கடை அமைக்ககோரி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மதுக்கடை இல்லாததால் சந்துக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது என்றனர்.

வாக்குவாதம்

அப்போது மதுக்கடை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுக்கடை வேண்டாம் என்றவர்கள் சந்துக்கடைகளை முதலில் மூட வேண்டும் என்றனர். இதையடுத்து லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். தென்கரைகோட்டையில் மதுக்கடை வேண்டாம் என்றும், மதுக்கடை வேண்டும் என்று இருதரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story