டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்
இறக்கு கூலியை உயர்த்தி வழங்கக்கோரி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் குடோன்
கரூர் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்குகூலியை உடனடியாக உயர்த்தி கொடுக்க வேண்டும் எனக்கூறி நேற்று தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.), டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ.5.50-ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து 8-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெட்டிக்குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.6.50-ல் இருந்து ரூ.9-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
போராட்டம்
வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். குடோன்விட்டு குடோன் மாற்றும் போது பெட்டி ஒன்றுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும் கடந்த 5-ந்தேதியில் இருந்து உயர்த்தி வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நேற்றுமுதல் கோரிக்கைகள் அடிப்படையில் இறக்குகூலி வழங்கும் மதுபான கம்பெனிகளின் பெட்டிகளை மட்டும் இறக்குவோம் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இறக்குகூலி உயர்த்தி வழங்காததால் சுமைப்பணி தொழிலாளர்கள் நேற்று மதுபான பெட்டிகளை இறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.