விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்


விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்
x

தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட பணியிட மாறுதலை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கை நிறைவேறாவிட்டால் 20-ந் தேதி கடையடைப்பு நடத்துவோம் என அறிவித்துள்ளனர்

விழுப்புரம்

விழுப்புரம்

போராட்டம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு டாஸ்மாக் பணியாளர் சங்க தொ.மு.ச. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

கோரிக்கைகள்

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 50 பேருக்கு எந்தவித முகாந்திரம் இன்றியும், டாஸ்மாக் விதிகளை கடைபிடிக்காமலும் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராகவும் வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மதுபான கூட உரிமையாளர்கள், டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிக்க முற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களிடம் ஒரு மது பாட்டிலுக்கு ரூ.5 கேட்டு மிரட்டும் கரூர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் தங்கவேல், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட தலைவர் இளஞ்செழியன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க விழுப்புரம் நகர செயலாளர் அழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடையடைப்பு

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினரிடம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விஜயசண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களது கோரிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர், நிருபர்களிடம் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வருகிற 19-ந் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவேற்றித்தர வேண்டும், இல்லையெனில் 20-ந் தேதி (திங்கட்கிழமை) விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 228 டாஸ்மாக் கடைகளையும் மூடி அதில் பணியாற்றி வரும் 800 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story