டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
x

பணகுடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

டாஸ்மாக் கடை

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்தவுடன் கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 60) என்பவர் காவல் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணிக்கு 3 பேர் கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்தது. திடீரென அவர்கள் காவலாளி தேவராஜை மிரட்டி, அவரது வாயில் மதுவை ஊற்றினர்.

மதுபாட்டில்கள் கொள்ளை

பின்னர் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை இரும்பு கம்பி மூலம் நெம்பியுள்ளனர். ஷட்டர் திறந்ததும் உள்ளே புகுந்த அவர்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்குப்பையில் அள்ளிப்போட்டு கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து பணகுடி போலீசில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். அதில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மேலும் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story