டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தக்கோரி பெரம்பலூரில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு மது பிரியர்களிடம் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் காலி மது பாட்டில்களை மது பிாியர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து, ரூ.10-ஐ திரும்ப பெற்று சென்றனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தை பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்த கோரி டாஸ்மாக் நிர்வாகத்தை வலியுறுத்தி பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் பெரம்பலூரில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியை திணிக்கக்கூடாது

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.வி.ராஜா கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் பணியை திணிக்கக்கூடாது.

பயனாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் மோதலை உருவாக்கும் இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த திட்டம் பணியாளர்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும். இருக்கின்ற மோசமான பணி சூழலில் இந்த திட்டம் அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும், இந்த திட்டத்தை நிறுத்த கோரி டாஸ்மாக் நிர்வாகத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story