குமாரபாளையம் நகராட்சியில் ரூ.1¾ கோடி வரி பாக்கி-ஆணையாளர் தகவல்
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சியில் ரூ.1¾ கோடி வரி பாக்கி உள்ளதாக ஆணையாளர் கூறினார்.
சாதாரண கூட்டம்
குமாரபாளையம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று காலை நகராட்சி மன்ற கூட்டத்தில் நடந்தது. இதற்கு தலைவர் விஜய் கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் தர்மராஜ் பேசுகையில், அம்மன் நகர் பகுதியில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து தார்சாலை அமைக்கப்படுமா? என்றார்.
அதற்கு ஆணையாளர் ராஜேந்திரன், தற்போது ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டது. வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறினார்.
அ.தி.மு.க. நகர செயலாளரும், கவுன்சிலருமான பாலசுப்பிரமணியன், அம்மன் நகரில் ரோடு அமைப்பது குறித்து தங்கமணி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுப்போம் என்றார்.
நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ் (தி.மு.க.), தனது வார்டில் உப்பு தண்ணீர் டேங்க் அமைக்க 8 மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ஆனால் தற்போது வரை வேலை முழுமை அடையவில்லை. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
குற்றவியல் நடவடிக்கை
அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.என்.பழனிசாமி பேசுகையில், நகராட்சிக்கு வர வேண்டிய வரி, முழுமையாக வசூலிக்கப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆணையாளர் ராஜேந்திரன் பதில் அளிக்கையில் சொத்து வரி ரூ.63 லட்சமும், தொழில் வரி ரூ.1 லட்சமும், குடிநீர் வரி ரூ.45 லட்சமும், குப்பை வரி ரூ.30 லட்சமும் உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் வர வேண்டியுள்ளது. கடைகளுக்கான வரி நூறு சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
எஸ்.என்.பழனிசாமி, மற்ற நகராட்சிகளை விட குமாரபாளையம் நகராட்சியில் குப்பை வரி அதிகமாக உள்ளது என்றார். அதற்கு தலைவர் விஜய் கண்ணன் பதில் அளிக்கையில், குப்பை வரி அதிகமாக இருப்பதற்கு காரணம் அதனை கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த தங்கமணி மற்றும் அ.தி.மு.க.வினர் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து தான் வெளியேற்ற வேண்டும். விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.