மண்சரிவால் தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது


மண்சரிவால் தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது
x

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவு ஏற்பட்டு, தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவு ஏற்பட்டு, தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

தொடர் மழை

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சியில் இன்றுகாலையில் இருந்தே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

விடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் இன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் வெள்ளத்தில் மரக்கிளைகள், பாறைகள் அடித்து வரப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அத்துமீறி செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்மட்டம் உயர்வு

மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2721 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 48.65 அடியாக உள்ளது. இதேபோன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 814 அடி வந்து கொண்டிருக்கிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 91.50 அடியாக உள்ளது. பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சுவர் இடிந்தது

தொடர் மழையால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் வாட்டி வருகிறது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது.

இதற்கிடையில் அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, 200-க்கும் மேற்பட்ட தேயிலை செடிகள் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது. இது தவிர சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,408 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது நீர்மட்டம் 142.15 அடியாக உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து உள்ளது.

அதிகாரி ஆய்வு

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் ராஜன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கொட்டும் மழையிலும் தோட்ட தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் பைகளை போட்டுக்கொண்டு வேலை செய்தனர். இன்று மாலையில் 3 மணிக்கு பிறகு தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகங்கள் பணியில் இருந்து விடுவித்தனர்.

1 More update

Next Story