வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கைது
மங்கலம்பேட்டையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இவர் நேற்று தனது பேரன் சித்தார்த்துடன் (5) மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் அவர் தனது பேரனுடன் டீ வாங்கி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டீ கடையின் உரிமையாளா் அண்ணாதுரை (60) என்பவர், குப்பனிடம் அவரது சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதுடன் இங்கே டீ குடிக்க வரக்கூடாது என கூறி அசிங்கமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு குப்பன் ஏன் எங்களுக்கு டீ தர மாட்டீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அண்ணாதுரை குப்பனை பிளாஸ்டிக் சேர் மூலம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அண்ணாதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.