பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தீர்மானம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துராமசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏழை மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆணையிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சினையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இலவச கல்வி
மாணவர்களின் நலனை காக்க வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஆசிரியர் பணி நியமனம் செய்து, கட்டாய இலவச கல்வியை அனைத்து தமிழக மாணவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்களுக்கு உள்ளது போல் தமிழக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் பற்றி பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 3 சதவீதம் அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மாநில பொருளாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.