தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்
x
சேலம்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மனு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெற்றார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் கைகளில் ஆசிரியர் நியமன தேர்வை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

இதையடுத்து அவர்களில் சிலர் வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், அனைத்து அரசு பணிகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி அமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றப்படுகிறது. அதனால் அரசாணை 149-யை விரைந்து செயல்படுத்தி நியமன தேர்வை உடனே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதி

ஓமலூர் அருகே உள்ள கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவர் நேற்று காலை தனது மனைவி குப்பாயியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணையில், நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர்கள் தீக்குளிக்கும் நோக்கத்தில் இங்கு வந்தது தெரியவந்தது.

இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் லீலாவதி (வயது 86). உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, லீலாவதி உறவினர் ஒருவருக்கு வீட்டை தானமாக எழுதி கொடுத்துள்ளார். தற்போது அவர், லீலாவதியை வீட்டில் இருந்து வெளியே செல்லுமாறு கூறுகிறார்.

எனவே அந்த தானம் பத்திரத்தை ரத்து செய்யவேண்டும் என்றனர்.


Next Story