விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார்


விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக கூறினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக கூறினர்.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையில் நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாக்கினாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

கல்வி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்த வேண்டும். இதற்காக 80 குழுக்கள் அமைக்கப்பட்டு, தினமும் 1000 விடைத்தாள் வீதம் திருத்த வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

600 ஆசிரியர்கள்

பொள்ளாச்சியில் விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 600 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் இடநெருக்கடி, கழிப்பிட வசதி உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் கூறியதாவது:-

புறக்கணிக்க முடிவு

பொள்ளாச்சியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதிய இடவசதி இல்லை. ஆசிரியர்கள் குறுகலான இடத்தில் இருந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. மேலும் வகுப்பறைகள் இல்லாததால் வெளியே வராண்டாவில் இருந்து விடைத்தாள் திருத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பள்ளியில் நாளை (இன்று) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. இதனால் மேலும் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாக உயிரியல், கணினி அறிவியல், கணிதம் போன்ற பாடத்திற்கு ஆசிரியர்கள் இன்னும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கவில்லை. குழந்தைகள் அமரும் சிறிய பெஞ்சில் ஆசிரியர்கள் உட்கார்ந்து விடைத்தாள் திருத்துவது சிரமமாக உள்ளது. கணினி அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர்களுக்கு விடைத்தாள் கொடுக்காததால் திரும்பி சென்று விட்டனர். நாளை (இன்று) விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story