அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்


அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை

ஆசிரியர் தின விழா

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தாமரை செல்வன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும், தனித்திறனிலும் சிறந்து விளங்க வேண்டும். அதுவே நீங்கள் எங்களுக்கு தரும் ஆசிரியர் தின பரிசு என கூறினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா மற்றும் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். கடந்த 2022-23 கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதம் பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயமும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற ஜெயராம் என்ற மாணவருக்கு ரூ.1,000 பரிசாக பட்டதாரி தமிழாசிரியர் செந்தில்குமார் வழங்கினார். கணினி ஆசிரியர் சுரேஷ் பள்ளிக்கு புரவலர் நிதி அளித்து தன்னை பள்ளி புரவலராக இணைத்து கொண்டார்.

மணமேல்குடி

மணமேல்குடி வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சீனிவாசன், ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மேலும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஜெயஜோதி, மணி, சுவாமிநாதன், மனோஜ்குமார், அருள் ஜோதி மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் வழங்கல்

அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பழனிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் மதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ரஞ்சனி உள்ளிட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு ஒலி ஒளிக் கருவிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் மாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 300 நாட்டு அத்தி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் மாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம் 300 நாட்டு அத்தி மரக்கன்றுகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கினார். ஆசிரியர் சரவணன் மரக்கன்று வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story