விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி உயர்வு

பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பணி நிரவல், இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு உரிய ஆணைகளை பெற்று வேறு பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதமாக வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்களை மட்டுமே பணி மூப்பு அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயா பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் செல்வமணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட துணை தலைவர் சாதிக் வரவேற்று பேசினார். இதில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில தணிக்கையாளர் அருளானந்தம், மாவட்ட செயலாளர் வேல்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.

புதிய கல்வி கொள்கை

ஆசிரியர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளில் 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில பிரசார செயலாளர் வடிவேல் முருகன், மாநில தனியார் பள்ளி செயலாளர் ராஜா, மாநில துணை தலைவர் மூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story