மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது


மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது
x

மாணவர்கள் தற்கொலை என்றாலே ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஊட்டியை சேர்ந்த கலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கூடலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், மாணவர்களின் தலைமுடியை வெட்டுவது, அசிங்கமாக திட்டி, கொடுமை செய்வார். இந்த கொடுமையை அனுபவித்த 12-ம் வகுப்பு படித்து வந்த என் மகன் மனவேதனையில் தற்கொலை செய்துக்கொண்டான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், சரியாக விசாரிக்கவில்லை.

எனவே, தலைமை ஆசிரியர் ராபர்ட் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

உண்மை இல்லை

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 17-ன்படி மாணவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கொடுமை செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்ட தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவின்படி, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியர் பள்ளியில் ஒழுக்கத்தை தீவிரமாக அமல்படுத்தியுள்ளார். முடிவெட்டாமல் வரும் மாணவர்களுக்கு தன் சொந்த பணத்தை கொடுத்து முடிவெட்டி வரச்செய்துள்ளார். இவர் எடுத்த முயற்சியால், அந்த பள்ளியின் தேர்ச்சி விகிதம் 45 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், மனுதாரர் தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கு உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

பொய் குற்றச்சாட்டு

தலைமை ஆசிரியர் தரப்பில், மாணவனின் தற்கொலைக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை. மனுதாரரின் மகன் ஒழுங்காக பள்ளி வந்தது இல்லை. அடிக்கடி விடுப்பு எடுப்பான் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தனியாக நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியருக்கு எதிராக புகார் நிரூபிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை அவதூறு கூறுவதை ஏற்க முடியாது. பணியில், செயலில் ஒழுங்கீனமாக செயல்பட்டால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

எளிதான செயல்

மாணவர்களை அடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. அதை மீறி அடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், மாணவர்களின் ஒவ்வொரு செயல்களுக்கும், ஆசிரியர்களை குற்றம் சொல்ல முடியாது. மாணவன் தற்கொலை என்றாலே ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றத்தை சுமத்தக்கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோல அவதூறு பரப்புவது என்பது எளிதான செயல். ஆனால், அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது என்பது கடினமான செயலாகும்.

பள்ளியில் ஒழுக்கத்தை பராமரித்து, தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் தலைமை ஆசிரியர்களை அங்கீகரிக்க வேண்டும். அவர்களை பெற்றோரும், பொதுமக்களும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

அதிகரிப்பு

ஒரு மாணவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பதில் பெற்றோருக்கு முக்கிய கடமை உள்ளது. தங்களது பிள்ளைகளின் உடல் மற்றும் மன உறுதிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் நடத்தைகளையும், ஒரு ஆசிரியரால் கண்காணிக்க முடியாது. தற்கொலை செய்வதும், முயற்சிப்பதும் அண்மைகாலங்களில் அதிகரித்து வருகின்றன. எனவே, மாணவர்களின் மனநிலை குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து ஆராய்ந்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அவமரியாதை

ஒருவரது தற்கொலைக்கு யார் காரணம் என்பதை புலன்விசாரணையின் மூலம் தான் நிரூபிக்க முடியும். ஆசிரியர்கள் மீது வீண் பழிபோடுவது விரும்பத்தகாத செயல் ஆகும். அதனால், பள்ளிக்கூடத்துக்குத்தான் அவமரியாதை ஏற்படும். இந்த வழக்கில் மாணவனின் தற்கொலைக்கு தேவையில்லாமல் தலைமை ஆசிரியரை இழுத்துள்ளனர். அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story