ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வால்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வால்பாறை வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், புகார்களை தெரிவிக்க அவரை சந்திக்கவே முடிவதில்லை என்று கூறி அனைத்து ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார் விரைந்து வந்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து வால்பாறைக்கு ஆய்வுக்கு வந்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
அறிக்கை அனுப்ப உத்தரவு
மாவட்ட கல்வி அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும், உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்று முன் அறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்த இருந்த கூடுதல் வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வத்திடம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும். ஆசிரியர்களை போராட்டம் நடத்தும் நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என்றும், நடந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.