பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
ஆலத்தூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி ஆலத்தூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 14, 17, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட எறிபந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, வளைகோல் பந்து ஆகிய குழு போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின.
போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் மணி, அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) ஆலத்தூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் பாடாலூர் அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.