அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அல்ட்ரா ஸ்கேன்
மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 4 அல்ட்ரா ஸ்கேன் செய்யும் கருவி இருந்தும் கடந்த ஒரு மாதமாக அதற்கான டாக்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாததால் இந்த ஸ்கேன் செய்ய அவசியமான கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக நோய் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏழை-எளிய மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் இந்த ஸ்கேன் செய்ய தனியார் ஸ்கேன் சென்டரில் ரூ.1200 முதல் ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரியை நாடும் ஏழை மக்கள் தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று அல்ட்ரா ஸ்கேன் செய்வதால் மிகுந்த பண இழப்பு ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள்.
தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லை
மயிலாடுதுறை மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 4 அல்ட்ரா ஸ்கேன் கருவி இருந்தும் அதை செயல்படுத்த டாக்டர்கள், அதற்கான தொழில் நுட்ப உதவியாளர்கள் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் உபரியாக அல்ட்ரா ஸ்கேன் செய்யும் டாக்டர்கள் உள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அவ்வாறு உள்ள டாக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.