திருவிழா கூட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது - 47 பவுன் நகை பறிமுதல்


திருவிழா கூட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது - 47 பவுன் நகை பறிமுதல்
x

திருவிழா கூட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 47 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், மேலகோட்டையூர் அம்மன் கோவிலில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது 8 பெண்களிடம் இருந்து தங்க நகை மாயமாகி இருந்தது. இது குறித்து 8 பேரும் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்ட மணிமங்கலத்தை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 25) என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 47 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவருடன் மேலும் 3 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதும், சேலம் வீராணம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே இந்த பெண் மீது நகை பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

கேளம்பாக்கத்திலும் இதே போன்ற சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story