கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய வாலிபர் - கோவிலில் திருடப்பட்டதா?


கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய வாலிபர் - கோவிலில் திருடப்பட்டதா?
x

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஐம்பொன் சிலைகளுடன் வாலிர் கைதானார். அது கோவிலில் திருடப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் 1½ கிலோ எடை கொண்ட சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும், சுமார் 300 கிராம் எடை கொண்ட 3 அங்குலம் உயரம் உள்ள சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.

அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் (வயது 32) என்பதும், சென்டரிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது. இவருடன் வந்து தப்பி ஓடியவர், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (30) என்பதும் தெரிந்தது.

பிடிபட்ட சுதாகரிடம் ேபாலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில் திருச்சி, லால்குடியை சேர்ந்த பெண்மணி ஒருவர், அந்த 2 சிலைகளையும் கொடுத்து அனுப்பியதாக கூறினார். மேலும் அவரிடம் பழைய 2 ருபாய் நோட்டும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அதில், "சென்னையில் உங்களை சந்திக்க வரும் நபரிடம் இந்த 2 ரூபாய் நோட்டை காண்பித்தால் அவர்கள் ஐம்பொன் சிலைகளை வாங்கி கொண்டு ரூ.3 லட்சம் கொடுப்பார்கள். அதனை வாங்கி வரவேண்டும்" என கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், இது ெதாடர்பாக சுதாகரை ைகது செய்தனர். மேலும் அந்த ஐம்பொன் சிலைகளை எங்காவது கோவிலில் இருந்து திருடி வந்தார்களா?. இந்த சிலைகளை இவர்களிடம் கொடுத்து அனுப்பிய பெண் யார்? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த சிலைகளை கைமாற்றப்படுவதற்கு அடையாளமாக அந்த பழைய 2 ரூபாய் நோட்டை பயன்படுத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான சுதாகரிடம் தொடர்ந்து விசாரித்து வரும் போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளி தினேசையும் தேடி வருகின்றனர்.


Next Story