காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை


காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
x

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

ஆற்றில் குதித்த வாலிபர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியை சேர்ந்தவர் நஸ்ரத் கான் (வயது 52). இவரது மனைவி சாஜிதா (48). இவர்களது மகன் ரியாஸ்கான் (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பின்னர் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை காவிரி ஆற்றின் மீது உள்ள பழைய பாலத்தில், தனது ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் ரியாஸ்கான் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு திடீரென ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதிக்கும் முன்பு அவர் தனது நண்பனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் தன் தாயை பார்த்துக் கொள்ளும்படி நண்பனிடம் கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்த வாய்ஸ் மெசேஜ் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பாலத்தின் மீது ாியாஸ்கான் ஸ்கூட்டர் மட்டும் நின்றுள்ளது. இதுகுறித்து அவரது நண்பர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், நடராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பாலத்தின் மீது சென்று பார்த்தனர்.

பின்னர் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் ரியாஸ்கான் உடலை தேடினா். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் ரியாஸ்கானின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாஸ்கான் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story