காதலன் பேச மறுத்ததால்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சிகடலூரில் பரபரப்பு


காதலன் பேச மறுத்ததால்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சிகடலூரில் பரபரப்பு
x

காதலன் பேச மறுத்ததால் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

ரெட்டிச்சாவடி,

பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்

கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே புதுச்சேரி சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. பிரதான சாலையாக இருப்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். நேற்றும் வழக்கம் போல் போக்குவரத்து நிறைந்து இருந்தது.

இந்நிலையில் மதியம் 2 மணியளவில் அந்த பகுதிக்கு 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்துவிட்டார்.

துரிதமாக செயல்பட்ட மீனவர்கள்

சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதித்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வாகனத்தை நிறுத்தி, ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், படகில் மீன்பிடித்தவர்கள் துரிதமாக செயல்பட்டு ஆற்றுக்குள் மூழ்கிய, அந்த இளம் பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பேச மறுத்த காதலன்

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அந்த பெண், ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவரது காதலன் இளம் பெண்ணிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இளம் பெண்ணும் பல முறை அவருக்கு போன் செய்து பார்த்தும், அந்த வாலிபர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம் பெண் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பரபரப்பு

இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணுக்கு உரிய அறிவுரை வழங்கினர். தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, 30 அடி உயரத்தில் இருந்து குதித்த இளம் பெண்ணுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்க கூடும். அதிர்ஷ்டவசமாக அவர் தற்போது உயிர்தப்பி இருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story