திருமணம் செய்ய மறுத்ததால் முகநூல் தோழி உள்பட 3 பேரை தாக்கிய வாலிபர் கைது


திருமணம் செய்ய மறுத்ததால் முகநூல் தோழி உள்பட 3 பேரை தாக்கிய வாலிபர் கைது
x

இரணியல் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் முகநூல் தோழி உள்பட 3 பேரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் முகநூல் தோழி உள்பட 3 பேரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

முகநூல் பழக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிஷோர் சிவசங்கர் (வயது 24). இவருக்கும், குமரி மாவட்டம் கப்பியறை வேளாண்கோடு பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். அதை தொடர்ந்து நட்பாக பேசி பழகி வந்தனர். நாளடைவில் நிஷோர் சிவசங்கரின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டு ஒருதலையாக அந்த பெண்ணை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிஷோர் சிவசங்கர் அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

தோழி தாக்கப்பட்டார்

இதனால் நிஷோர் சிவசங்கர் அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் அந்த பெண் அவரின் செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டு தொடர்பை முறித்துக் கொண்டாராம்.

இந்தநிலையில் முகநூல் தோழியை நேரில் சந்திக்க நிஷோர் சிவசங்கர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். இரணியல் அருகே பேயன்குழியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் அவர் இருப்பதை எப்படியோ அறிந்த நிஷோர் சிவசங்கர் அங்கு சென்று அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை கவனித்த அந்த பெண்ணின் தாய், உறவுக்கார பெண் ஆகியோர் நிஷோர் சிவசங்கரின் செயலை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர் தோழி உள்பட 3 பெண்களையும் தாக்கினார்.

வாலிபர் கைது

இதில் தோழியின் தாய், உறவுக்கார பெண் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷோர் சிவசங்கரை கைது செய்தனர்.


Next Story