கல்லூரி மாணவரை பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
ஆலங்குடியில் கல்லூரி மாணவரை பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மகன் முகமது நூர் பையாஸ் (வயது 21). இவர் ஆலங்குடி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். இவரது தந்தை ஆலங்குடி- வடகாடு சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்சுதீன் வெளியூர் சென்றதால் முகமது நூர் பையாஸ் நேற்று முன்தினம் மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகன் மகன் விமல்ராஜ் (24), போஸ் மகன் வெள்ளைச்சாமி (22) உள்பட 3 பேர் மளிகை கடைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சிறையில் அடைப்பு
இதில், ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் கடையில் இருந்த கண்ணாடி பாட்டிலால் முகமது நூர் பையாஸ் தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த முகமது நூர் பையாஸை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து முகமது நூர் பையாஸை தாக்கிய வெள்ளைச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.