சிறுவர்களுக்கு போதை ஊசி, மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
சிறுவர்களுக்கு போதை ஊசி, மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்து வருகிறார்கள். போதை ஊசிக்கு சமீபத்தில் ஒரு வாலிபரும் பலியானார். இந்த நிலையில் திருச்சி செங்குளம் காலனி பால்வாடி அருகே சிறுவர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அலுவலர் மைமூன் பீவிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் பாலக்கரை போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார்(வயது 20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், போதை மருந்துகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.